0

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து, அதை உடனடியாக செயல்படுத்தியும் விட்டது மத்திய அரசு. கடந்த 8-ம் தேதி இரவு இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார். '9-ம் தேதி வங்கிகள் இயங்காது, 9,10-ம் தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூடப்படும்' என அறிவிக்க பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் சாமான்ய மக்கள். இந்த இரு தினங்களும் பணத்துக்காக அல்லாடி போயினர்.

நிரப்பப்படாத ஏ.டி.எம்.கள்

கையில் 500, 1000 ரூபாய்களை மட்டுமே வைத்திருந்த பொதுமக்களும், 'வங்கியில்தான் இருக்கிறதே, எப்போது வேண்டுமானாலும் ஏ.டி.எம்.மில் எடுத்துக்கொள்ளலாம்' என நினைத்திருந்தவர்களும் சொல்ல முடியாத சிரமத்துக்குள்ளாகினர்.

பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், 5ம் தேதிக்கு பின்னரே மாத ஊதியம் போடப்படும் நிலையில், 6,7,8 தேதிகளில் வங்கி கணக்கில் சம்பளம் பெற்றவர்கள், வங்கி கணக்கில் இருந்து சம்பளத்தை எடுக்க முடியாமல் திண்டாடிப் போயினர்.

'கறுப்பு பணத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்' என மத்திய அரசு சொன்னாலும், சாமான்ய மக்களின் வாழ்க்கையை இது வெகுவாகவே பாதித்தது. இந்த சிரமங்களுக்கு இடையேயும், 'ஒரு நாள் வங்கி இருக்காது. இரண்டு நாட்கள் ஏ.டி.எம். இருக்காது. இரு நாட்களை ஓட்டினால்போதும் அதன் பின்னர் ஏ.டி.எம்.மில் பணம் கிடைத்து விடும். வேறு வழியும் நமக்கு இல்லை' என பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம். இன்று பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படவில்லை.

ரூ.500, ரூ.1000க்கு பதில் ரூ.2000த்தோடு அலைந்த மக்கள்

அதே சூழலில் வங்கிக்கு சென்று தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பதும் சாமான்ய மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்க, ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டு திரும்புவது என்பது மிகப்பெரிய சவாலாக மாறிப்போனது. 'நேற்றோடு இந்த பிரச்னை ஓரளவு தீர்ந்து விடும்' என எண்ணி இருந்தவர்களை, ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்ப வைக்காமல் விட்டு, மீண்டும் தத்தளிக்க வைத்தது மத்திய அரசு.

கறுப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என சொல்லப்பட்டாலும், சாதாரண, சாமான்ய மக்கள்தான் வங்கியில் கால் கடுக்க காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றிச்சென்றனர். சிரமப்பட்டு, கையில் இருக்கும் 500 ரூபாய்களை கொடுத்தால், அதற்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்குகின்றனர் வங்கி அதிகாரிகள்.

3 நாட்களாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த மக்கள், இப்போது 2000 ரூபாய் நோட்டோடு திரிகின்றனர். எந்தக் கடையிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்கவில்லை. 'சில்லறை வேணும்னா 1000, 500 ரூபாய் நோட்டாதான் இருக்கு பரவாயில்லையா?' என கேட்க... மறுபடியும் முதல்ல இருந்தா...என எண்ணியபடியே, என்ன செய்வது என தெரியாமல் சுற்றித்திரிந்தனர் மக்கள்.

தவறு யார் மீது?

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின்போது மக்கள் அவதிக்குள்ளாவது என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அதை ஓரளவு சமாளித்திருக்கலாம். அரசு சொன்ன கால அவகாசத்தையும் கடந்து, தொல்லைகள் தொடர்கிறது எனச்சொன்னால் தவறு யார் மீது? திட்டமிட்டபடி இரு தினங்களில் ஏ.டி.எம். மையங்களில் 100 ரூபாய் நோட்டுகளை நிரப்பியிருந்தால் இந்த பிரச்னை பெருமளவு தீர்ந்திருக்கும். சொன்னபடி புதிய 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம். இயந்திரத்திலும், வங்கியிலும் கிடைத்திருந்தால் பிரச்னை ஓரளவு தணிந்திருக்கும். ஆனால் அதற்கான சரியான திட்டமிடலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பாதது என்பது முன்கூட்டியே எந்த திட்டமிடலும் இல்லாததைத்தான் காட்டுகிறது.

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கையின் போது. சாமான்ய மக்களுக்கு எத்தனை சிரமங்கள் ஏற்படும் என்பதை கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ஏ.டி.எம்.களில் 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை தேவைக்கேற்ப நிரப்பியிருந்தால் இது போன்ற சிக்கலை பெருமளவு தவிர்த்திருக்கலாம். அதை செய்யவில்லை. வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் பெறுவதை இன்னும் எளிதாக்கி இருந்தாலும் பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அலுவலக நேரத்தில் மட்டுமே பெற முடியும். அதையும் நீண்ட வரிசையில் காத்திருந்து, வங்கியில் பெற வேண்டும் என்பதால், காத்திருந்து பணத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எப்போது கிடைக்கும் புதிய 500 ரூபாய்?

மறுபுறம் இப்போதைய தேவையான 500 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதில் ஏற்பட்டு வரும் தாமதம். இப்போதைய சூழலுக்கு 500 ரூபாய் நோட்டுகள்தான் மிக அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு நீங்கள் 500 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறீர்கள் என்றால் மீதம் 1,500 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது என்பது மிகவும் சிரமம். அப்போது மீண்டும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை பெற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் முதலில் அரசு 500 ரூபாய் நோட்டுகளை விட்டிருக்க வேண்டும். ஆனால் அதிலும் முறையான திட்டமிடல் இல்லை. இன்னும் ஓரிரு தினங்களுக்கு பின்னரே 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் எனச்சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அடுத்த ஓரிரு தினங்கள் மக்கள் இதே போன்று அலைய வேண்டியிருக்கும்.

மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை இது என்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் கருப்பு பணம் ஒழிகிறதோ இல்லையோ, இத்தனை நாள் புழக்கத்தில் இருந்த கள்ள நோட்டுகள் முற்றிலுமாய் ஒழிந்து விடும் என நம்பலாம். இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதுதான். அதை முற்றிலும் மறுப்பதற்கில்லை. ஆனால் இதை முறையான திட்டமிடலுடன் செய்திருந்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிரமங்களை பெருமளவு தவிர்த்திருக்கலாம். அதை செய்யத் தவறி விட்டது இந்த அரசு.

அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சாமான்ய மக்களின் நலனை மையப்படுத்தி அமைய வேண்டும். இனியாவது இதை ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ளட்டும்.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top