0

மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம் அவர் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். 2016 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளைக் கொண்டதாகும். இதன் 19-ஆவது சுற்று மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் மெக்ஸிகோ சிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 71 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி, 40 நிமிடம், 31.402 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த சீசனில் அவர் 8-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் அவர் பெற்ற 51-ஆவது வெற்றி இது.

வெற்றி குறித்துப் பேசிய ஹாமில்டன், "மெக்ஸிகோவில் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறேன். இது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நிகோ ரோஸ்பெர்க்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனினும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இருக்கிறேன்' என்றார்.

மெர்ஸிடஸின் மற்றொரு டிரைவரான நிகோ ரோஸ்பெர்க் 2-ஆவது இடத்தையும், ரெட்புல் டிரைவர் டேனியல் ரிச்சியார்டோ 3-ஆவது இடத்தையும் பிடித்தனர். ஃபெராரி டிரைவரான செபாஸ்டியன் வெட்டல் 3-ஆவது இடத்தைப் பிடித்தபோதும் விதிமுறைகளை மீறியதன் காரணமாக 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தற்போதைய நிலையில் சாம்பியன் பட்டம் வெல்வதில் மெர்ஸிடஸ் டிரைவர்களான நிகோ ரோஸ்பெர்க், நடப்பு சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நிகோ ரோஸ்பெர்க் 349 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 330 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் போட்டியின் 20-ஆவது சுற்றான பிரேசில் கிராண்ட்ப்ரீ போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் நிகோ ரோஸ்பெர்க் வெற்றி பெறும்பட்சத்தில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார். இங்கு ஹாமில்டன் இதற்கு முன்னர் வென்றதில்லை என்பது ரோஸ்பெர்க்கிற்கு சாதகமானதாகும்.

ஒருவேளை ஹாமில்டன் இதில் வென்றாலும், கடைசிச் சுற்றான அபுதாபி கிராண்ட்ப்ரீ போட்டியிலும் வெல்ல வேண்டும். அதேநேரத்தில் அந்த இரு போட்டிகளிலும் நிகோ ரோஸ்பெர்க் முதல் இரு இடங்களுக்குள் வராமல் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஹாமில்டனால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top