0

7 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த மின்சார ரயில் விபத்தின் மர்ம முடிச்சுக்களைத் தடய அறிவியல் துறை அவிழ்த்துள்ளது. அதன்பிறகும் ரயிலை இயக்கியவரை கண்டுப்பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திணறி வருவது வேடிக்கையாக இருக்கிறது.

2009 ஏப்ரல் 29-ம் தேதி அதிகாலை நேரத்தில் சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட மின்சார ரயில் பிளாட்பாரத்தில் தயாராக இருந்தது. அதிகாலை நேரம் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். சரியாக 4.58 மணிக்கு புறப்பட்ட ரயில் பிளாட்பாரத்தை கடந்தவுடன் வேகமெடுத்தது. அப்போது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கும் இடையே சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்தது.

அதே தண்டவாளத்தில் மின்சார ரயில் சென்றதால் இரண்டு ரயில்களும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்பிறகே ரயிலை இயக்கியது வழக்கமான டிரைவர் அல்ல, மர்மநபர் என்ற தகவல் தெரிந்தது. விபத்தில் ரயிலை இயக்கியவர் உள்பட 4 பேர் பலியாகினர். இதில் மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்கள் அனைவரும் பயணிகள். இதனால் ரயிலை இயக்கிய நபர் யார் என்ற விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு ரயில்வே போலீஸிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக ரயிலை இயக்கியது யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திணறி வந்தனர். இந்த சூழ்நிலையில் குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் தடயஅறிவியல் பல்கலைக்கழக இயக்குநர், பேராசிரியர் என இருவரிடம் வழக்கு தொடர்பாக சில தடயங்களை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் கேட்டனர். அதன்படி, அங்கு இருந்து சென்னை வந்த தயா, ராஜேஸ்பாபு ஆகியோர் மர்மநபர் ரயிலை இயக்கியது போல அவர்களும் மின்சார ரயிலை இயக்கிப்பார்த்து சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடமும் கொடுத்துள்ளனர். அந்த அறிக்கை எக்ஸ்குளுசிவ்வாக நமக்கு கிடைத்தது.

அந்த அறிக்கையில் ரயிலை இயக்கிய மர்ம நபர் குறித்த சில முக்கியத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரயிலை இயக்கியவர் ஆந்திராவை சேர்ந்த நாகாராஜா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்து குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காமல் இருந்தது. குஜராத் தடயஅறிவியல் துறை கொடுத்த அறிக்கையில் அந்த விபத்தை ஏற்படுத்த காரணமான மர்ம நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ரயிலை இயக்கியது தீவிரவாதி என்று கூட சந்தேகிக்கப்பட்டது. அடுத்து ரயில்வே டிரைவர்களுக்கு இடையே நடந்த மோதலின் வெளிப்பாடு என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ரயிலை இயக்கி விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை தடயஅறிவியல் துறையினர் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தனர். அப்போது ரயிலை இயக்கிய நபர் குறித்த தகவல்கள் கிடைத்தது. ரயிலை ஓட்டியது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகாராஜா என்று தெரியவந்தது. இதற்கு ஆதாரமாக விபத்தில் சிக்கி இறந்த உடலில் ஒருவரது கையில் தெலுங்கில் நாகாராஜா என்ற பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. அந்த பெயர் அதிகம் உள்ள ஆந்திர மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும், ஆந்திர எல்லையான ஒடிசா மாநிலம் ராஜகடா என்ற மாவட்டத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராஜகடா என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், நாகாராஜா தன்னுடைய கணவர் என்று உரிமை கோரினார். உடனடியாக அந்தப் பெண்ணின் மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கும், நாகாராஜாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிந்தது. இதன்பிறகு திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாருடனுடன் நாகாராஜாவின் ரத்த மாதிரிகள் ஒத்துப்போகவில்லை.

இந்த சமயத்தில் ரயிலை இயக்கிய நபர் நாகாராஜா என்பதை தடயஅறிவியல் துறையினர் சேகரித்த தடயங்கள் மூலம் சொல்கின்றனர். அதாவது, விபத்துக்குள்ளான ரயில் 80 கி.மீட்டரிலிருந்து 100 கி.மீட்டர் வரை இயக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக தடயஅறிவியல் துறையினர், 80 கி.மீட்டர் வேகத்தில் ஒரு மின்சார ரயிலை இயக்கினர். அந்த ரயில் சென்ட்ரலிருந்து புறப்பட்டவுடன் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது. பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கு வரும்போது பிரேக்கை தடயஅறிவியல் துறையினர் பிடித்தனர். 50 மீட்டர் கடந்த பிறகே பிரேக் பிடித்தது. சரக்கு ரயில் நிற்பதைப்பார்த்த ரயிலை ஓட்டிய மர்மநபர், ரயில் இருந்து கீழே குதித்து இருக்க முயன்று இருக்க வேண்டும். அப்போது அவரது உடல் 50 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதோடு ஒரு கையும் துண்டாகியுள்ளது. ஒருவேளை ரயிலை இயக்கிய மர்மநபர் உள்ளேயே இருந்திருந்தால் அவர் நிச்சயம் இரண்டு ரயில்களும் மோதிய வேகத்தில் அவரது உடல் நசுங்கியிருக்கும். எனவே ரயிலை இயக்கிய மர்மநபர் நாகாராஜா என்று குஜராத் தடயஅறிவியல் துறையினர் அறிக்கை கொடுத்துள்ளனர். இப்போதைக்கு யார் அந்த நாகாராஜா என்பதை கண்டறியவே விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

Post a Comment

 
Top